(இ - ள்.) அறை கழல் அரவத்தானை அச்சுவக்கிரீவன் என்பான் - ஆரவாரிக்கின்ற கழலையும், முழக்கத்தையும் உடைய படைகளுக்கு வேந்தனான அச்சுவகண்டன் என்பவனும், நிறை புகழ் ஆழி தாங்கி நிலம் எலாம் பணிய நின்றான் - நிறைந்த கீர்த்தியையுடைய சக்கரத்தை ஏந்தி உலகெலாம் பணியுமாறு விளங்குகின்றவனுமாகிய வேந்தன், திறைதர வேண்டும் என்று விடுதர - உன் தந்தையின்பால் திறையிறுத்தல் வேண்டும் என்னும் செய்தியைச் சொல்ல இத்தூதரைவிட, செருஅந்தானை இறைவனும் - போர்வல்ல அழகிய படையையுடைய நம் பயாபதி வேந்தனும், அருளிச் செய்தான் - அச்சுவகண்டன் உவந்த பொருள்களை அளிப்பானாயினன், இது இங்கு விளைந்தது என்றான் - இந்நிகழ்ச்சியே இப்பொழுது இவ்விடத்தே நிகழ்ந்தது என்று அக்குறளன் கூறினான், (எ - று.) “செரு வந்தானை இறைவனும்“ என்றது பயாபதி திறைகொடுப்பது தகுதியன்று என்பதைக் குறிப்பான் உணர்த்தியது. நிலமெலாம் பணிய நின்ற அச்சுவகண்டன் திறைதரவேண்டும் என்று தூதரை விடுதரச் செருவந்தானை இறைவனும் அருளிச்செய்தான், இது இவ்விடத்தே நிகழ்ந்தது என்றான் என்க. அருளிச்செய்தான் என்றது இகழ்ச்சி. |