(இ - ள்.) திறைக்கடன் என்னும் - அக்குறளன் இது நுந்தை அச்சுவகண்டனுக்கு இறுக்கும் திறையாகிய கடமைப் பொருள் என்ற, அத்தீச்சொல் - அக்கொடுஞ் சொல்லை, கேட்டலும் - கேட்டவுடனே; நிறைக்கடல் நிரம்பிய - நிறைந்த கடல் போன்று கல்வி கேள்விகளான் நிரம்பிய, நெஞ்சத் தீக்கலுள் - திவிட்டனுடைய நெஞ்சமாகிய சூரியகாந்தக் கல்லின்கண், முறைகெட முளைப்பதோர் முனிவின், தன் மரபு முறைமை கெடுதலானே தோன்றிய சினமாகிய, ஒள்ளெரி - ஒள்ளிய நெருப்பினை, கறைப்படுபடையவன் - குருதிக்கறை பட்ட வேற்படையையுடைய அத்திவிட்டநம்பி, கனலமூட்டினான் - மேலும் மேலும் கனன்றெரியும்படி வளர்த்துக் கொண்டனன், (எ - று.) கேள்விக் கின்னாதாதலின் தீச்சொல் என்றார். நிறைக்கடல் முறைக் கெட கறைப்படு என்பன எதுகை நோக்கி வருமொழி வல்லெழுத்து மிக்கு நின்றன. தீக்கல் - சூரியகாந்தக்கல். முறையாவது - தம்மரபினர் பிறர்க்குத் திறை கொடாமையாகிய முறைமை. அது கெடுதலானே தோன்றிய முனிவு என்றவாறு. தீங்கலுள் என்றும் பாடம். இதனை மெலித்தல் விகாரமாகக் கொள்க. அதனை எண்ணுந் தோறும் சினம் மிகுதலின் கனல மூட்டினான் என்றார். |