(இ - ள்.) படத்திடை - தனது படத்தின் நடுவில் உள்ள, சுடர்மணி - ஒளியுடையமணி, தீண்டப்பட்டு - அயலான் ஒருவனால் தீண்டப் பட்டமையால், எரிகடுத்திடும் அரவென - நெருப்பை ஒத்துச்சினந் தெழுகின்ற பாம்பைப்போல, கனன்ற நோக்கமோடு - அழலும் கண்களோடு, அடுத்து எரிந்து - மேலும் மேலும் சினந்து, அழல் நகை நக்கு நக்கு - சினச்சிரிப்பு அடிக்கடி சிரித்துச் சிரித்து, எடுத்து உரை கொடுத்தனன் இளைய காளையே - திவிட்டன் பின்வரும் வாசகங்களை எடுத்துக் கூறுவா னாயினான், (எ - று.) ஒருவனால் தன் படத்திலுள்ள மணி தீண்டப்பட்டதாக, கனன்றெழும் பாம்பேபோல் நம்பி கனன்றெழுந்து அழல் நகை நக்கு நக்கு எடுத்துக் கூறினான், என்க. |