இதுமுதல் 7 செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சினமொழிகள்
684. உழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ
லெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
லழகிது பெரிதுநம் 3மரச வாழ்க்கையே.

     (இ - ள்.) நம் அரச வாழ்க்கை - நாம் வாழுகின்ற உயரிய அரச வாழ்க்கையாவது,
உழுது தம் கடன் கழித்து உண்டு - நிலத்தை உழுகின்ற தொழிலைச் செய்து, அரசிறை
முதலிய தம் கடன்களைச் செலுத்தித் தம் வயிற்றையும் ஓம்பி, வேந்தரை வழி மொழிந்து -
அரசருக்குப் பணிமொழி கூறி, இன்னணம் வாழும் - இங்ஙனமாக வாழுகின்ற,
மாந்தர்போல் - ஏழை மனிதர்களைப் போல, எழுதிய திறையிறுத்து இருந்து -
பகை மன்னர் எழுதி விடுத்த திறைப்பொருளை அவர்க்கு அஞ்சிக் கொடுத்து உயிர்
வாழ்தலை விரும்பி இருந்து, வாழ்வதேல் - வாழ்கின்ற வாழ்வே ஆகுமாயின், பெரிது அழகிது - இவ்வாழ்க்கை மிகவும் அழகுடைத்து, (எ-று.)

உழுதுஇறை செலுத்தி உண்டு வழிமொழிந்து வாழும் எளிய உழவர் வாழ்க்கைபோன்று,
பகைமன்னர் எழுதிவிடுத்த திறைப் பொருளை நல்கி அஞ்சியிருந்து வாழும் அரச
வாழ்க்கை, மிக நன்றென்றான் என்க.

( 112 )