(இ - ள்.) உட்க ஆங்கு உரைத்தலும் - கேட்டோர் அஞ்சுமாறு திவிட்டன் அங்ஙனம் கூறியவுடன், ஒளிர்பொன் மாழையும் - ஒளியுடைய அழகிய பொற்குவியல்களும், கள்கமழ் கோதையர் கணமும் - தேன் மணம் கமழ்கின்ற கோதையணிந்த மகளிர் கூட்டமும், மீண்டது - விச்சாதரரிடத் தினின்றும் மீட்கப்பட்டன, தூதர் - அத்தூதர்களும், வட்கி - ஒளிகுன்றி, துட்கெனும் மனத்தினர் - துண்ணென அஞ்சிய நெஞ்சினராய், நம் இறைவற் குத்தெவ் வலிது எனஏகினார் - நம் அரசனாகிய அச்சுவகண்டனுக்கு வலிமைமிக்க பகைஒன்று தோன்றியுளது என்று நினைந்து வந்தவழியே மீண்டு ஏகினார், (எ - று.) மீண்டது, ஒருமைபன்மை மயக்கம். கேட்டோர் அஞ்சுமாறு நம்பி சினந்து இவ்வாறு கூறியவுடன், தூதர் மனம் நடுங்கி, அச்சுவகண்டற்கு அரும்பகை ஒன்று புதிதாகத் தோன்றியுளது என்று கருதிப் போயினர் என்க. |