அரிமஞ்சு தனக்குள் சிந்தித்தல்
694. அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு 2வதனைக் கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா
னிரும்பகை யிதனை 1யென்கொல் விலக்குமா றென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன்2சூழ்ச்சிகொண் மனத்தனானான்
 

     (இ - ள்.) அரும்பெறல் அறிவின் - அரிதில் முயன்று பெற்ற அறிவையுடையோனும்,
செல்வன் - சிறந்த செல்வம் உடையவனும், சுரும்பு இவர் தொடையல் மார்பன் - அளிகள்
மொய்க்கின்ற பூந்தொடையலை அணிந்துள்ள மார்பினனும் ஆகிய, அரிமஞ்சு
அதனைக்கேட்டே - அரிமஞ்சு என்னும் அவ் அமைச்சன் அத்தூதர்கள் கூறிய செய்தியைக்
கேட்டு, பெரியவன் - பெரியவனாகிய அச்சுவகண்டன், பெரும்பகை அதனைக் கேட்பில்
சிறிதும் நோனான் - பெரும்பகைக்குக் காரணமான அத்திவிட்டன் கூற்றைச் செவியுறப்
பெறின் ஒரு சிறிதும் பொறான், இரும்பகையிதனை - பெரிய பகையாகிய இந்நிகழ்ச்சியை,
என் கொல் விலக்கும் ஆறு என்று - நிகழாமற்றடுக்கும் வழியாது என்று, தானே சூழ்ச்சி
கொள் மனத்தன் ஆனான் - தனக்குள் தானே ஆராய்ந்துகொள்ளும் நெஞ்சையுடையவன்
ஆனான், (எ - று.)
தூதர்கள் கூறக்கேட்ட அரிமஞ்சுவும், உடனே அச்சுவகண்டனுக்கு இதனைக் கூறின் அவன்
பொறான்; இப்பகையை எளிதிற்றீர்க்கும் ஆறு வேறு யாதாம் என ஆராய்ந்தான், என்க.
 

( 122 )