(இ - ள்.) மின்தொடர்ந்து இலங்குபூணான் - ஒளிஇடையறாது விளங்கும் அணிகலன்களையுடைய திவிட்டன் என்பான், விளைவுறா இளமை தன்னால் - அறிவுமுதிரப்பெறாத இளமை உடைமையால், நன்று தீது என்னும் தேர்ச்சி நவின்றிலன் - நல்லது இது கெட்டது இது என்றறிகின்ற தேர்ச்சி யறிவின் நின்று இவ்வாசகங்களைச் சொல்லினானலன், ஆதலால் - அங்ஙன மிருத்தலால், யான் ஒன்றவோர் மாயங்காட்டி - யான் பொருந்து மாற்றால் ஒரு மாயத்தைச்செய்து, உளைவித்து - அத்திவிட்டனைக் கலக்கங்கண்டு, குறுகஓடி - நெருங்கிச் சென்று, குன்றிடை - மலைக்குகையில் உறைகின்ற, சீயந்தன்மேல் கொள்ள - சிங்கம் திவிட்டன்மேல் பாய்தலை மேற்கொள்ளும் படி, புணர்த்திடுவன் என்றான்-சூழ்ந்திடுவன் என்றான், (எ - று.) திவிட்டன் தன்னிளமையால் விளைவறியாது விளம்பினான் ஆதல் வேண்டும். எனவே யான் ஒரு மாயத்தாலே திவிட்டனை அரிமாப்பாய்ந்து கொல்லுமாறு புணர்ப்பல் என்று கருதினான் என்க. |