அம் மாயச்சிங்கத்தின் தன்மை
697. ஒள்ளெரி நெறிப்பட் 3டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க
ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்.
 

      (இ - ள்.) ஒள் எரி நெறிப்பட்டன்ன - ஒள்ளிய நெருப்புக்கற்றை ஒழுங்குற
அமைந்தாற் போன்ற, சுரியுளை - சுருண்டடர்ந்த பிடரிமயிரையும், மலைகண் போழும் -
மலையிடத்தைப் பிளக்கும் வலிமையுடைய, வள்ளுகிர் - வளைந்த நகங்களையும், மதர்வை
- களிப்பையும், திங்கட்குழவி வாள் எயிற்று - பிறையை ஒத்த ஒளியுடைய பற்களையும்,
பைங்கண் உள்ளெரி உமிழ நோக்கி - பசியகண்களில் தீக்காலப் பார்த்து, உரும் என அதிரும் - இடிஇடித்தாற்போல முழங்கும், பேழ்வாய் - பெரிய வாயையும் உடையதோர்,
கொள்அரி உருவுகொண்டான் - சிங்கத்தின் உருவத்தை மேற்கொண்டான் ; (அவன்
யாரெனில்) கொடியவன் கடியசூழ்ந்தான் - தீயவனும் தீமை செய்ய ஆராய்ந்து
முற்பட்டவனும் ஆகிய அரிகேது - என்பான், (எ - று.)

     கோளரி - கொள்ளரி என விகாரமெய்தி நின்றது. அரிகேது, சுரியுளை, வள்ளுகிர்,
வாளெயிறு, பைங்கண், அதிரும் பேழ்வாய், ஆகிய இவையிற்றை உடைய அரிமாவுருக்
கொண்டான் என்க.

( 125 )