(இ - ள்.) இலைத்தடம் சோலைவேலி இமவந்தம் அடைந்து இலைகள் செறிந்த அகன்ற பொழில்களை வேலியாகவுடைய இமயமலையை எய்தி, நீண்ட சிலைத்தடம் தோளினார்தம் சிந்து நாடதனைத் சேர்ந்து - நெடிய விற்படை பொருந்திய தோளையுடைய விசய திவிட்டருடைய சிந்து நாட்டையடைந்து, மலைத்தடம் பிளந்து சிந்த - மலையிடங்கள் பிளவுபட்டு திருமாறும், மண்புடை பெயர - நிலம் நடுங்குமாறும், முந்நீர் அலைத்துடன் கலங்கி விண்பால் அதிர - கடல் திரையெடுத்துக் கலங்கி விசும்பு அதிர ஒலிக்குமாறும், நின்று உரறியிட்டான் - நின்று முழக்கம் செய்தான், (எ - று.) அரிகேது அரிமாவாகி, இமயமலை வழிச்சென்று சிந்து நாட்டை எய்தி, மலைபிளந்து சிந்தவும், மண்புடை பெயரவும், முந்நீர் கலங்கவும், விண் அதிரவும் முழங்கினான் என்க. |