தேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல் | 70. | ஆங்கவர் திருவயிற் 1றமரர் கற்பமாண் டீங்குட னிழிந்துவந் திருவர் 2தோன்றினார் வாங்குநீர்த் திரைவளர் 3வளையு மக்கடல் ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு 4மூர்த்தியார். | (இ - ள்.) வாங்கு - உலகத்தை வளைந்த; நீர்த்திரை - நீரையுடைய கடலினது அலையிலே; வளர் - பிறந்து வளருகிற; வளையும் - சங்கையும்; அக்கடல் - அக்கடலினது; ஓங்கும்நீர் நிழலும் ஒத்து - உயர்ந்த நீரினது நிறத்தையும் ஒத்து; ஒளிரும் மூர்த்தியார் - முறையே வெண்மையாகவும் கருமையாகவும் விளங்குகின்ற வடிவத்தை யுடையவர்கள்; அமரர் கற்பம் ஆண்டு - தேவர்கள் வாழும் தேவலோகத்தில் அரசாட்சி செய்திருந்து; ஈங்கு - இப்பொழுது; உடன் இழிந்துவந்து - ஒன்றாக நிலவுலகத்தையடைந்து; அவர் திருவயிற்றுத் தோன்றினார் - மிகாபதி சசி என்பவர்களின் திருவயிற்றிலே பிறந்தார்கள். (எ - று.) தேவர்கள் வாழ்தற்குக் கற்பிக்கப்பட்ட இடமாகிய கற்பலோகம் சௌதர்மம் (1) ஈசானம் (2) சனற்குமாரம் (3) மகேந்திரம் (4) பிரமம் (5) பிரமோத்தரம் (6) இலாந்தவம் (7) காபிஷ்டம் (8) சுக்கிரம் (9) மகாசுக்கிரம் (10) சதாரம் (11) ஸகஸ்ராரம் (12) ஆநதம் (13) பிராணதம் (14) ஆரணம் (15) அச்சுதம் (16) எனப் பதினாறென்பது சைனநூற் கொள்கை. ஒரு கற்பத்தில் அரசு வீற்றிருந்த இருவரே விசயதிவிட்டர்களாகத் தோன்றினர் என்று தோலா மொழியார் கூறுகிறார். ஜம்பூத் வீபத்தில் பரதகண்டத்தில் மகத நாட்டில் இராசகிருகம் என்னும் நகரத்தில் அரசனும் இளவரசனுமாய்ச் செங்கோல் செலுத்தியவர்களும் சிற்றப்பனும் அண்ணன் மகனுமாகிய உறவு முறையை முறையே உடையவர்களும் ஆகிய விசாகபூதி, விசுவநந்தி என்னும் அரசர்கள், ஸம்ப்ருத குருவினிடம் தருமங் கேட்டுத் தீக்கைபெற்று முனிவரானார்கள். சில காலஞ் சென்ற பின்னர் அவ்வுடலை யொழித்து மகாசுக்கிரம் என்னும் கற்பத்தில் தேவர்களாய் வாழ்ந்து, பிறகு நிலவுலகத்தில் விசய திவிட்டர்களாகப் பிறந்தார்களென்று ஸ்ரீபுராணம் கூறுகிறது. அமரர் : அமிருதம் உண்டபடியினால் மரணம் இல்லாதவர். கற்பம் ஆண்டு - கற்ப லோகத்தை அரசாட்சி செய்து; கற்பலோகமாகிய அங்கிருந்து எனினும் ஆம். திரைதல் - மடிதல்; மடித்து மடித்து வீசுதலால் அலைக்குத் திரையென்னும் காரணப் பெயர் உண்டாகியது. அங்கும் இங்கும் சென்று அலைதலை யுடையது அலை. வளை என்பது சங்குக்கு உள்ளே வளைந்திருத்தலால் உண்டான காரணப்பெயர். விசயன் வெண்ணிறமும் திவிட்டன் நீலநிறமும் உடையராதலின் “வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல், ஓங்குநீர் நிழலுமொத்தொளிரு மூர்த்தியார்“ என்றார். மாதர் இருவரும் மாண்புமிக்க மக்களைப் பெற்றனராதலின் அவர் தம் வயிறு திருவென்னும் அடைபெற்றது. | (1) | | |
|
|