தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
704. அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா மைக்குவந் தீயுந்
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன்.
 

     (இ - ள்.) நமக்கு உவந்து ஈயும் திறையும் - பயாபதி வேந்தன் நமக்கு
மகிழ்ச்சியுடனே இறுக்கும் திறைப் பொருளைத்தானும், மீட்கிய வலித்த அச் செருக்குடைச்
சிறியோன் - மீட்டுக்கொள்ளத் துணிந்த செருக்குமிக்க இளைஞனாகிய அத்திவிட்டன், தன் அரும்பெறல் நாட்டினை அரிய எறியும் மின் உரும்என இடித்து - பெறற்கரிய தன் நாடு பிளவுறும்படி வீசுகின்ற மின்னலுடனே இடி இடித்து முழங்கினாற்போல முழங்கும், முழையுள் உறையும் கோளரி - குகையில் உறையும் கொலைத்தொழில் வல்ல அரிமா
உண்மையை, அறியும் ஆயில் - அறிந்திருப்பனாயின்; ஒழிக்கலான் - அச் சிங்கத்தை
இன்னும் கொன்றொழித்திலன்; அதற்குக் காரணம் என்னை?(எ-று.)

     அமர்ந்த பின்னர் எம்மரசன். அத் திவிட்டன் என்பான் தன் முன்னோரீந்த
திறைப்பொருளை மறுத்த செருக்குடையன் அவன் நாட்டில் ஒரு சீயம் மக்களை நலியா
நிற்பவும், அதனைக் கேட்டும் வாளாவிருந்ததேன்! நம்மை அடர்க்கும் ஆற்றலுடையோன்
அச்சிங்கத்தை எளிதிற் கொன்று தன்குடிகட்கு நன்மை செய்யலாமே என்றிரங்கினான்
என்றார் என்க. இச்சூழ்ச்சி மிக அரிய சூழ்ச்சியாதலறிக.

( 132 )