(இ - ள்.) அதுகேட்டு அயனின்றோர், அடிகள் - அடிகளே! உளது - ஆம் அங்ஙனமே ஒரு சிங்கம் உள்ளது!' வாழி - வாழ்க!, நின் ஒலிபுனல் சிந்துநல் நாட்டில் உளது கோளரி - உன் ஆட்சியினமைந்த ஓசைமிக்க புனலால் வளமிக்க சிந்து என்னும் இந்த நல்ல நாட்டிலே உள்ளது கொல்லுதல் வல்ல அவ்வரிமா, களைதல் யாவர்க்கும் அரியது - கொன்றொழித்தற்கு எத்திறத்தார்க்கும் இயலாத வலியுடையது, உரும்என இடித்து உயிர் பருகி - இடிபோல முழங்கி உயிரினங்களைக் கொன்று தின்று, கனமணிக் குன்றில் - சிறந்த மணிகளையுடைய மலையின கண் உள்ள, அளவின்நீள் முழை உறைகின்றது - அளத்தற்கரிதாய் நீண்ட குகையில் வதிகின்றது, என்றுரைத்தார் - என்று கூறினார், (எ - று.) நம்பியின் வினாவைக் கேட்டோர், ஆம் அரசே அங்ஙனமே கொடியதோர் அரிமா நம்மலையில் கொன்று உயிர் பருகி உறைகின்றது என்று கூறினார் என்க. |