(இ - ள்.) ஆயின் - அங்ஙமானால், மற்றதன் - அச்சிங்கத்தின், அரும் வரைப்பிலம் என அகன்ற வாயை - அரிய மலைக்குகை போன்று விரிந்த வாயினை, போழ்ந்து உடல் இருபிளப்பா வகுத்திடுவன் - கிழித்து அதன் உடல் இரண்டு பிளவுகளாகும்படி பிளப்பேன், ஏ - ஏ! ஏ!!. இப்பெற்றியே விளைத்திலன் ஆயின் - இவ்வாறே யான் செய்திலேன் எனின், நும் வேந்தன் பேயிற் பேசிய - உம்முடைய அரசன் ஆராயாது மருள் கொண்டபேய் போலச் சொல்லிய, பிள்ளையே ஆகென்று - பிள்ளைமை யுடையேனே ஆவேன் என்று கூறி, பெயர்ந்தான் - புறப்பட்டான், (எ - று.) அதுகேட்டு வியப்புற்ற நம்பி நம்நாட்டினும் அத்தகைய கொடிய அரிமாத் திரிவதோ! அதன் வாயை இருபிளப்பாய்ப் பிளந்து, அதனை யான் கொல்வேன். கொல்லேன் ஆயின் அச்சுவகண்டன் உரைத்தபடியான் ஒரு பேதைப் பிள்ளைமையுடையேனே ஆகுவன் என்று சூளுரைத்தான் என்க. |