மிகாபதி விசயனைப் பெறுதல்

71. பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழ்ந்து வான்கொள
வெண்ணிலாச் சுடரொளி 1விசயன் றோன்றினான்.
 
     (இ - ள்.) பெண்நிலாம் தகை-பெண் தன்மைக்குப் பொருந்திய நலங்கள் அமைந்த;
பெருந்தேவி - பயாபதி மன்னன் முதல் மனைவியான மிகாபதியினது; பேர்
அமர்க்கண்ணில்-பெரும்போர் செய்யவல்ல கண்களில்; ஆம்களிவளர் உவகை கைம்மிக -
மிகுந்த களிப்புண்டாதற்குக் காரணமான மகிழ்ச்சி சிறக்கும் உவகை மிகுதியாக; தண்நிலா -
குளிர்ந்த நிலவொளி; உலகு எலாம் தவழ்ந்து வான்கொள - நிலவுலகெங்கும் பரவித் தேவருலகத்தையுஞ் சென்றடையுமாறு நின்ற; அ வெள்நிலா சுடர் ஒளி-அந்த
வெண்திங்களின் பேரொளியைத் தன்னிடத்தே கொண்ட; விசயன் தோன்றினான் - விசயன்
என்பவன் பிறந்தான். (எ - று.)

     பெண்ணில் ஆம் தகை எனப் பிரித்துப் பெண்களிலே சிறந்த பெருமையையுடைய
என்று பொருள் கூறினுமாம். தகை-நாணம் முதலிய பெண்மைக் குணங்களும் அழகுமாம்.
பெருந்தேவி - மூத்த மனைவியாகிய மிகாபதி. உவகை - தொழிற்பெயர். விசயன் என்னும்
வட சொல்லுக்குச் சிறப்பான வெற்றியை யுடையவனென்று பொருள். தன்னை வெல்பவர்
எவரும் இலலாதவனெனினுமாம்.
 

 (2)