விசயன் திவிட்டனுடன் செல்ல நினைதல்
710. நகர மாசன மிரைப்பது தவிர்த்தபி 1னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை 2தெளிந்தனன் திருவமார் பினன்பின்
மகர 3மாகடல் வளைவண்ண னுடன்செல வலித்தான்.
 

     (இ - ள்.) நகரமாசனம் இரைப்பது தவிர்த்தபின் - போதன மாநகர்க்கணுள்ள
குடிமக்கள் தன்னைத் தடுத்தலான் எழுந்த ஆரவார ஒலியை அடக்கிய பின்னர், நளிநீர்
பகருமா கடல் படிவம் கொண்டனை யவன் படர - செறிந்த நீரையுடைய புகழ்மிக்க கரிய
கடல் ஓர் இளைஞனுருவம் கொண்டாற் போன்ற வண்ணத்தையுடைய திவிட்டன் செல்ல,
சிகரமால் வரை - முடியையுடைய மலையை ஒத்த, திருவமார்பினன் - அழகிய மார்வத்தை
யுடையவனும், தெளிந்தனன்பின் - அறிவுத் தெளிவுடையவனும் ஆகிய திவிட்டன் பின்னர்,
மகரமா கடல் வளை வண்ணன் - மகரமீன்கள் உலாவும் பெரிய கடற்கணுள்ள சங்கை ஒத்த
வெண்ணிறவண்ணனாகிய விசயனும், உடன்செல வலித்தான் - அவனோடு செல்லுதலை
எண்ணினான், (எ - று.)

     நகர மக்களின் ஆரவாரத்தை அகற்றிய பின்னர், நம்பி தனியே புறப்பட்டுச் செல்ல, விசயனும் அவனோடு செல்ல எண்ணினன் என்க.
 

( 138 )