இருவரும் அவ் வரிமா வதியும் இடம் எய்துதல்

711. புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த
வழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
தொழிற்கொண்டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்.
 

     (இ - ள்.) புழல்கை மால்களிறு - தொளையமைந்த துதிக்கையையுடைய பெரிய
யானையினது, எருத்திடை புரோசையிற் பயின்ற - பிடரிற் கட்டப் பட்டுள்ள புரோசைக்
கயிற்றில் மிதித்துப் பயின்ற, கழல்கொள் சேவடி வீரக்கழலையணிந்த செந்நிற அடிகள்,
கருவரை இடைநெறி கலந்த - கரிய மலைகளின் ஊடே செல்லும் வழிகளில் பரவியுள்ள,
அழல் கொள்வெம் பொடி அவைமிசை - வெப்பமிக்க வெவ்விய மணலின்மேல், புதைய -
பதியும்படி, அவ்வரிமான் - அந்தச் சிங்கம், தொழிற்கொண்டு - கருமத்தை மேற்கொண்டு,
ஆருயிர் செகுக்கின்ற சூழல் - அரிய உயிர்க்குலங்களைக் கொன்றழிக்கின்ற இடத்தை,
சென்று அடைந்தார்- போய்ச் சேர்ந்தோர், (எ-று.)
புரோசை - யானைக் கழுத்திடு கயிறு.

     யானையெருத்தத்தே புரோசைக் கயிற்றிலே மிதித்துப் பயின்ற தம் சேவடி நெறி
கலந்த வெம்பொடியிற் புதையச் சென்று அரிமா ஆருயிர் செகுக்கின்ற சூழலை அடைந்தார்
என்க.
 

( 139 )