அம் மாய அரிமாவின் முழக்கம்

712. அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
வுடைந்து போகவோ 1ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப
விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியென நெரிவொடு புரளா.
 

      (இ - ள்.) அடைந்த வீரரைக் காண்டலும் - அவ்வாறு வந்து சேர்ந்த விசய
திவிட்டர்களைப் பார்த்தவுடனே, அழல் உளை அரிமா - தீயை ஒத்த பிடரிமயிர்க்
கற்றையையுடைய (அரிகேதுவாகிய) அச்சிங்கம், உடைந்துபோக - அவ்வீரர்கள்
மனமுடைந்து ஓடிவிடுதலைக் கருதி, ஓர்இடி இடித்தென - ஒப்பற்ற பெரிய இடி ஒன்று
இடித்தாற்போல, உடன்று இடிப்ப - சினந்து முழங்க, இறுவரை இடிந்துபோயின - அம்
முழக்கத்தின் அதிர்ச்சியால் பெரிய மலைகள் இடிந்து சிதறின, அங்குடனே -
அப்பொழுதே, துறுகல் - குறுங்கற்கள், நெரிவொடு புரளா - நெரிந்து புரண்டு, பொரி
எனப் பொடிந்து போயின - நெற்பொரிகளைப் போலத் துகளாய் உதிர்ந்தன. (எ - று).
துறுகல் - சிறிய குன்றுமாம்.
     விசயதிவிட்டரைக் கண்டவுடன் அரிகேதுவாகிய அவ்வரிமா, அவர்கள் அஞ்சி
ஓடுதலை விரும்பி, இடி இடித்தென முழங்க, மலை துறுகல் முதலியன பொடிந்தனவாய்,
பொரிகள்போல் துள்ளிப் புரண்டன என்க.

( 140 )