(இ - ள்.) காளை - காளையை ஒத்த தோற்றமுடையவனும், ஆளி மொய்ம்பன் - சிங்கத்தை ஒத்த வலியுடையவனும் காள் ஒளி - கரிய நிறமுடைய, முகில்வண்ணன் - மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டனும் கழல்களை விசியா - வீரக்கழல்களை இறுகக் கட்டி, சுடர்விடு கடகங்கள் தோளின் மேற்செலச் செறியா - ஒளிவீசும் கடகம் என்னும் அணிகலன் தோளின் மேல் ஏறச்செறித்து, சூளிமாமணிகொண்டு - சூளா மணிமாலையைக்கொண்டு, சுரிகுஞ்சி பிணியா - சுரிந்த - தலைமயிரை வரிந்துகட்டி, அங்கு - அவ்விடத்தே, ஆர்த்தனன் - ஆரவாரித்தான், அவ்வரி உடைந்தது - அவ்வொலியின் அதிர்ச்சியால் அம்மாயச்சீயம் அஞ்சி ஓடலாயிற்று, (எ - று.) சூளி மாமணிமாலை - தலைமயிரைச் சுற்றிக்கட்டும் மணிமாலை. காளம் - கருப்பு - அது காள், என விகாரப்பட்டது. அவ்வரிமா முழங்குதலைக் கேட்ட திவிட்டன், கழல் விசித்துக் கடகங்களை ஏறச்செறித்து, குஞ்சி பிணித்துத் தானும் ஆரவாரித்தான்; உடனே அவ் வரிமா அஞ்சி உடைந் தோடிற்றென்க. |