அஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்
714. எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் 2விசையினாற் சிறந்தான்.

      (இ - ள்.) செங்கண் காரொளி நெடியவன் - சிவந்த கண்ணையும் கருநிற
மேனியையுமுடைய நெடுமாலாகிய திவிட்டன், எங்குப் போவது என்று - எனக்குத் தப்பி நீ
எங்குத்தான் செல்வாய்! என்று, உடைநெறி - சிதர்ந்து கிடக்கும் நெறியினூடே, பைங்கண்
கோளரி உருவு கொண்டவன் மிசைப் படர்ந்து - பசிய கண்களையுடைய
அரிமாவுருக்கொண்ட அரிகேதுவைப் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, வெங்கண் கூற்றமும்
திசைகளும் விசும் பொடும் நடுங்க - வெவ்விய கண்ணையுடைய மறலியும் எட்டுத்
திசைகளும் விண்ணும் நடுநடுங்குமாறு, விசையினாற் சிறந்தான் - விசைத்து ஓடுதலிலே
சிறந்தவனானான், (எ - று.)

 நெடியவன் நீ எங்குத்தான் போதி என்று, பின்பற்றிக் கூற்றமும் திசைகளும்,
விசும்பும் நடுங்க விரைந்து துரத்தினான் என்க.

( 142 )