(இ - ள்.) உலத்தின் வீங்கிய - உலக்கல்லை ஒத்துத் திரண்ட, ஒளிமணிச் சுடரணி திணிதோள் - ஒளிரும் மணிகளில் எழும் சுடர் அழகு செய்யப் பெற்ற திண்ணிய தோளினது, நலத்தின் வீங்கிய - நலமாகிய ஆற்றலான் மிக்க, நளிர் புகழ் இளையவன் - செறிந்த புகழை யுடைய திவிட்டனுடைய, விசையின் - வேகத்தால், நிலத்தின் கம்பமும் - பூமியில் ஏற்பட்ட நடுக்கமும், நெடுவரை அதிர்ச்சியும் - நீண்ட மலைகளில் உண்டாகிய அதிர்ச்சியும், எழுவ - தன்னை எழுப்புதலாலே, பிலத்தின் வாழ் அரியரசு - அந்தக் குகையில் வாழ்வுற்றிருந்த சிங்கமாகிய விலங்கரசு, தன் துயில் பெயர்ந்தது-தனது உறக்கம் கலைக்கப்பட்டு விழித்தெழுந்தது, (எ - று.) திவிட்டன் சென்ற விரைவினாலே உண்டாகிய பூமிநடுக்க முதலிய வற்றால் அக்குகையுள் உறங்கிக் கிடந்த அரியரசு துயில்கலைந்து எழுந்த தென்க. |