சசி திவிட்டனைப் பெறுதல்

72. ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்.
 

     (இ - ள்.) ஏர் அணங்கு - அழகிலே திருமகளையொத்த; இளம் பெருந்தேவி -
இளைய கோப்பெருந் தேவியாகிய சசி; நாள்உற - கருக் கொண்டு உயிர்க்கும்
நாள்வந்தெய்த அவள் வயிற்றில்; சீர் அணங்கு அவிர் ஒளித் திவிட்டன் தோன்றினான்.
சிறந்த தெய்வத் தன்மைபொருந்தி விளங்குகிற ஒளியையுடைய திவிட்டன் என்பவன்
பிறந்தான்; அப்பொழுது, நீர் அணங்கு - நீரால் அலைக்கப்படும்; ஒளிவளை - ஒளிமிக்க
சங்குகள்; நிரந்துவிம்மின - மிகுந்து முழங்கின; அமரர் - தேவர்கள்; அணங்குஆர் அலர்
மழை - அழகுபொருந்திய பூமாரி; சிந்தினார் - பொழிந்தார்கள். (எ-று.)

     காலம் நிறைந்தபோது சசியின் வயிற்றில் திவிட்டன் தோன்றினான். அப்போது
சங்குகள் முழங்கின; தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள். அணங்கு; முதலடியில் சிறந்த
தெய்வப்பெண்; இரண்டாம் அடியில் தெய்வத்தன்மை; விசயனைச் சசியின் மகனாகவும்
திவிட்டனை மிகாவதியின் மகனாகவும் ஸ்ரீபுராணம் கூறும். நாள் - கருவுயிர்க்கு நாள் -
தேவி வயிற்றில் நன்னாளுறத் திவிட்டன் தோன்றினான் என ஒருசொல் வருவித்து
முடிப்பினுமாம்.
 

 (3)