(இ - ள்.) அதிர ஆர்த்தலும் - அங்ஙனம் அதிரும்படி ஆரவாரித்தவுடனே, முதிர்வில் கோளரி - அவ்விளஞ்சிங்கம், அழன்று - சினந்து, தன் எயிற்றிடை - தனது பற்களிலே, அலர்ந்த கதிரும் - விரிந்த சுடர்களும், கண்களில் கனல் எரிச் சுடர்களும் கனல - கண்களிலே கனன்று எரியும் சினத்தீயின் சுடர்களும் கனன்றெரிய, முனிந்து எதிர் முழங்கலில் - சினந்து அவ்வாரவாரத்திற்கு எதிராகத் தானும் முழங்குதலாலே, பெருவரை நெரிந்து பிதிர்வு சென்றது - அந்தப் பெரிய மலை இடிந்து சிதர்ந்து போயிற்று, அப்பிலமே பிளந்தது - அக்குகையும் பிளந்தது, (எ - று.) எயிற்றிடை அலர்ந்த சுடரும், கண்களில் எரிச்சுடரும் கனல என்க. நம்பி ஆரவாரித்தலும் அம்மெய்ச் சிங்கம் முனிந்து எதிர் முழங்குதலாலே பெருவரை பிதிர்ந்தது; பிலம் பிளந்தது என்க. |