(இ - ள்.) எரிந்த இணைக்கண் - சினத்தீ நின்று எரிந்த இரண்டு கண்களின் ஒளியாலே, இறுவரை முழைநின்ற - அப்பெரிய மலைக்குகைக் கண்ணிருந்த, அனைத்தும் - பொருள்கள் எல்லாம், விரிந்த - விளங்கித் தோன்றின; வாயொடு வெளி உகிர் பரூஉத்தாள் சுரிந்த கேசரம் அனைத்தும் - அச்சிங்கத்தினுடைய வாயும் வெளிப்பட்ட நகங்களும் பருத்த கால்களும் சுருண்ட மயிரையுடைய பிடரியும் ஆகிய உறுப்புக்கள் அனைத்தும், பணைத்த - சினத்தாலே பருத்தன; சுடர்அணிவளை எயிற்று ஒளியால் - ஒளிர்ந்து அழகுடையனவாய் வளைந்துள்ள பற்களின் ஒளியால், ஆயிடை இருள் இரிந்தது - அக்குகையின் கண் உள்ள இருள் அகன்றது; அங்கு நின்று அவ்வரி எழுந்தது - அவ்விடத்தினின்றும் அவ் வுண்மைச் சிங்கம் புறப்பட்டது, (எ - று) இறுவரை - பெரிய மலை; அடிமலையுமாம், இற்ற மலையுமாம். விரிந்த - புலப்பட்டன என்றவாறு. கேசரம், பிடரிக்கு ஆகுபெயர், வெளிப்பட்ட உகிர் என்க. சிங்கம் உகிரைச் சுருக்கிக் கோடலும் வெளிப்படுத்தலும் உண்டு. |