அவ் வரிமா வெளிப்படுதல்
722. தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை
வாரித் திட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்
பூரித் 1திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்
பாரித் திட்டது பனிவிசும் 2புடையவர் பனித்தார்.

     (இ - ள்.) தாரித்திட்ட தன் தறுகண்மைக் குணங்களின் - தான் தரித்துள்ள
அஞ்சாமைக் குணங்கள் காரணமாக, உலகை வாரித்திட்டு - உலகை வெல்ல விரும்பிப்
பகையை வரித்து, இவண் வந்ததோர் அரி - இங்கு நம்மைத் தேடிவந்த ஒப்பற்ற
பகைச்சிங்கம் போலும், என மதியா - என்று எண்ணி, பூரித்திட்ட தன் பெருவலியோடு
புகழுடை அரிமா - பூரிப்படைந்த ஆற்றலும் புகழும் உடைய அச்சிங்கம், பாரித்திட்டது -
வெளிப்பட்டது, பனிவிசும்புடையவர் பனித்தார் - குளிர்ந்த வானுலகில் வதியும் அமரர்கள்
நடுங்கினார்கள், (எ - று.)

     தாரித்தல் - தரித்தல். வாரித்தல் - வரித்தல் - விழைதல்: நீட்டும் வழிநீட்டல்
பூரித்தல் - மகிழ்ச்சியால் உடல் விம்முதல் பாரித்தல் - வெளிப்படுதல், தறுகண்மையிற் செருக்குடைய ஓர் அரிமா பகையரிமாவைத் தேடி என்பால் வந்துளதுபோலும் எனமகிழ்ந்து
அவ்வரிமா வெளிப்பட்டது, அமரர்கள் அஞ்சினர் என்க.
 

( 150 )