(இ - ள்.) மார்பினுள் அளைந்து - தனது வலியஉகிர்களால் மார்பினுள் துழாவி, இழிதருகுருதியைக் குடிப்பான் - சோர்கின்ற செந்நீரைக் குடிக்கும் பொருட்டு, உளைந்து - பிடரிக்கண் உள்ள மயிர்சிலிர்த்து, கோளரி - சிங்கம், எழுதலும் - எழுந்து தன் மேல் பாய்தலும், உளைமிசை மிதியா - திவிட்டன் அதன் பிடரின்கண் தன் அடியை வைத்து, வளைந்த வாள்எயிற்றிடை - வளைந்த ஒளியுடைய பற்களின் இடையின், வலித்தடக் கையிற் பிடித்தான் - வலிய பெரிய தன் கைகளால் பற்றினான், அப்பெருவலி அரி - அந்தப் பேராற்றலுடைய அரிமா, பிளந்து போழ்களாய்க் கிடந்தது - அவ்வளவில் பிளக்கப்பட்டு இரு பிளவுகளாகிக்கிடந்தது, (எ - று.) அவ்வரிமா நம்பியின் குருதியைக் குடிக்க எண்ணி எழலும் அதன் பிடர்மிசை மிதித்து வாயிடைப் பற்றிப் பிடித்தான். அத்துணையே கண்டது, அச்சிங்கம் இருபிளவாய்க் கிடந்தது என்க. இங்ஙனமே கம்பரும், “கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்“ (கார்முக - 34) என்று கூறுதல் காண்க. |