(இ - ள்.) அமரர்கள் - தேவர்கள், அடுதிறல் அரிமா - கொல்லுதல் வல்ல இச்சிங்கம், சீயம் ஆயிரம் செகுத்திடும் - தன்னினமான ஆயிரம் சிங்கங்களைத் தனி நின்று கொல்லும், வயமா - யானைகளையோ எனில், ஆய ஆயிரம் ஆயிரம் - பல்லாயிரம் யானைகளை ஒருங்கே கொன்றழிக்கும், ஏஎனாமுன் இங்கு இவன் அழித்தனன் என - 'ஏ' என்று உச்சரிக்கும் இரு கணப்போதிற்கும் முன் இவ்விடத்தே இத்திவிட்டன் இத்தகைய சிங்கத்தைக் கொன்றழித்தான் என்று கூறி, தத்தம் வாயின்மேல் விரல்வைத்து நின்று - தங்கள் தங்கள் வாயில் விரல்களைச் சேர்த்தி நின்று, மருண்டார் - மருட்கையை எய்தினார், (எ - று.) மருளுதல் - வியப்பெய்தல், ஏ எனாமுன் : குறிப்புமொழி, ஒரு நொடிப்பொழுதில் என்றவாறு ஆயிரம் அரிமாக்களையும், எண்ணிறந்த யானைகளையும் தனிநின்று வெல்லும் ஆற்றலுடைய இவ்வரியரசை, நம்பி ஒரு நொடிப்போதிற் கொன்றனனே! என அமரர்கள் வாயில் விரல் சேர்த்தி வியந்தார் என்க. வயமா - வலியுடைய சிங்கம் புலி ஆளி முதலியவற்றிற்குப் பெயர். |