(இ - ள்.) அழிந்த கோளரி - திவிட்டனால் கொல்லப்பட்ட அச்சிங்கத்தினுடைய, குருதி - செந்நீர், அது அரும் கடம் களிற்றோடு ஒழிந்த வெண்மருப்பு - அவ்வரிமா முன்னர்க் கொன்ற யானைகளின் வெள்ளிய கோடுகள் உடலைவிட்டு வேறா ஒளிந்து கிடந்ததனவும், உடைந்தவும் - அக்கோடுகள் உடைந்தனவும், ஒளிமுத்தமணியும் - உடைந்த அக்கோட்டினின்றும் சிதறி ஒளியுடன் கிடந்த முத்தாகிய மணிகளும் ஆகியவற்றை வரன்றிக் கொண்டு, பொழிந்து கல்லறைப் பொலிவது - ஒழுகி அக்கற்பாறைக்கண் விளங்குவது; குலிகச்சேறலம்பி இழிந்த கங்கையின் அருவியொத்து - சாதிலிங்கக் குழம்பை அளையிஇப் பாயும் கங்கையாற்றின் அருவியைப்போல, அவ்விடத்தே இழிந்தது-அம்மலைச்சாரலில் ஓடிற்று,(எ-று.) அவ்வரிமாவின் குருதி, ஆண்டுக்கிடந்த ஆனைவெண்கோடு முதலியவற்றை அளைந்து சாதிலிங்கக் குழம்பை அலம்பிப் பெருகிய கங்கையின் அருவி ஒத்து ஒழுகியது. கோளரிக்குருதி பொலிவது அவ்விடத்தே கங்கை அருவியை ஒத்து இழிந்ததென்க. |