727. தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
னம்பி நாமினி நளிவரைத் தாழ்வர்கண் டல்லா
லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே.
 

    (இ - ள்.) வளை வண்ணன் - விசயன், தம்பி ஆற்றல் கண்டு - திவிட்டனுடைய
பேராற்றலைக் கண்கூடாகக் கண்டு, உவந்து தன்மனம் தளிர்த்து - மகிழ்ச்சிகொண்டு தன்
உளந்தழைத்து, ஒளியால் வம்பு கொண்டவன்போனின்று - அம் மெய்ப்பாடு புறம்பொசிந்து
தோன்றுதலால் ஒரு புத்துருவம் படைத்தவனைப் போன்று நின்று, மொழிந்தான், -
சொல்லினான், நம்பி - ஆடவர் தம்முட் சிறந்தோனே, நாம் இனி நளிவரைத் தாழ்வர்
கண்டல்லால் - நாம் இனிமேல் செறிந்த மலைகளின் தாழ்வரை வழியாகச் சென்றாலல்லது,
குருதியது இழிவு - இச்செந்நீரின் வெள்ளம் ஓடுதல், இம்பர்போம்படித்தன்று -
இவ்வழியாகச் செல்லும் தன்மைத்தன்று,
(எ - று.)
     விசயன் மிக்க மகிழ்ச்சியுடையனாய் நம்பீ! இவ்வழியெல்லாம் அவ்வரிமாவின் குருதி
யாறாக ஓடுதலால் யாம் இவ்வழியே போதல் சாலாது ஆதலின் இம் மலைச்சாரலின்
வழியே செல்வோம் என்றான் என்க.
     இதுமுதல் 40 செய்யுள்கள் ஒருதொடர் திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில
வனப்பினை
எடுத்துக் கூறல்

( 155 )