730. காளை வண்ணத்த களிவண்டு கதுவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலில யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்.
 

     (இ - ள்.) ஆளி மொய்ம்ப - அரிமாவை ஒத்த ஆற்றலுடையோனே! காள்ஐ
வண்ணத்த களிவண்டு - கரிய அழகிய நிறமுடைய களிப்பு மிக்க அளிகள், கதுவிய
துகளால் - போர்க்கப்பட்ட மகரந்தத்தோடு, தாளைமூசிய - நாளங்களில்
மொய்த்தலையுடைய, தாமரைத் தடம்பல - தாமரைகள் செழிப்புற்றுள்ள இடங்கள் பல,
அவற்றுள் - அவ்விடங்களுள், அகலிலை அலரொடுங் கிழிய - அகன்ற தாமரையின்
இலைகளும் மலர்களும் கிழிந்து போம்படி, வாளை பாய்வன - வாளைமீன்களும் விசைத்துப்பாய்கின்றன, கயமல்ல - அங்ஙனமிருந்தும் அவைகள் நீர்நிலைகளல்ல, மறவோய் - வீரனே! வனத்திடர், இடையறாது அருவி பாய்ந்தோடும் காட்டினுள்ள திடர்களேயாகும்,
 (எ - று.)

     காளம் ஐவண்ண எனக் கண்ணழித்துக் கொள்க. காளம் - கருநிறம். ஐ - அழகு.
காளம் காள் என்று ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு நின்றது, மலைச்சாரலில் உள்ள சாய்ந்த
திடர்களில் இடையறாது நீரோட்டம் நிகழ்தலின், அங்குத் தாமரைகள் செழிப்புற்றுள்ளன.
வாளைகள் துள்ளுகின்றன என்பதாம்.
 

( 158 )