(இ - ள்.) சூரல்அப்பித் தொடர்ந்து அடர் - பிரப்பங் கொடிகள் பற்றிப்படர்ந்து அடர்தலாலும், துளங்கும் அரில் - அசைதலையுடைய குறிய முட்புதல்கள், வேரலோடுமிடைந்து - மூங்கிற்காடுகளோடு செறிதலாலும், இருண்டு - இருண்டு கிடத்தலாலும், சாலப்பல சாதி - அக்காட்டில் வாழும் இயல்புடைய மிகவும் பலவாகிய மிலைச்சச்சாதி மானிடர், ஊரல் ஓவாது - அங்குமிங்கும் திரிதலை ஒழியாமல், உயிரை - உயிரினங்களை, கனன்று - சினந்து, விடார் - பற்றிவிடாதவர்களாய், விண்டு - அவற்றைப் பிளந்து, உண்டிடுதலால் - தின்றுவிடுதலால், சாரலாகாதன - மானிடர்கள் வழங்கவியலாதன இவ்விடங்கள், (எ - று.) சாதி உயிரை அனன்று விடார் விண்டு உண்டிடுதலால் சாரலாகாதன என்றியைத்துக் கொள்க. சாதி மானிடசாதியினரைச் சேர்ந்த ஊனுகர் மிலைச்சர் என்க. ஊன்தின் சாதி உண்மையில் அங்குப்பிறர் சாரலாகா தென்றான் என்க. |