(இ - ள்.) பரிய பாறைத்திரள் - பெரிய பாறைக் கற்களின் திரளின்மேல், படர்ந்த போலக் கிடந்து - படர்ந்து கிடப்பன போலக் கிடந்து, இரிய - அஞ்சிஓட, வேழங்களை - யானைகளைப் பிடித்து, விழுங்கி எங்கும் - விழுங்குதலைச் செய்து எவ்விடத்தையும், தமக்கு உரிய தானம்பெறா - தங்களுக்கு உறைவிடமாகப் பெற்று, உறங்கி - உறக்கங்கொண்டு, ஊறுங் கொளா - ஊற்றுணர்ச்சியும் அற்றனவாய், பிலங்கொள் பேழ் வாய - குகையை ஒத்த பெரிய வாயினையுடையவாகிய, பெரிய பாம்பும் உள - மிகப் பெரிய மலைப்பாம்புகளும் இவ்விடத்துள்ளன, (எ - று.) பாறைக் கற்களிற் பரிய கொடிகள் படர்ந்தாற்போன்று கிடந்து யானைகளை விழுங்கி ஊற்றுணர்ச்சியும் அற்றவாய்க் கிடந்துறங்கும் பெரிய பாம்பும் உள என்றான் என்க. |