(இ - ள்.) குழல்கொள் - வேய்ங்குழலிசையை ஒத்த இசையையுடைய, தும்பிக்கணம் - அளிக்கூட்டங்கள், கூடிஆட - கூடியிருந்து தேனுண்டு களித்து ஆடுமாறு, நகும் - மலர்ந்து விளங்கும், எழில்கொள் தாரோய் - அழகிய மாலையையுடைய இளையோனே, விரைந்து இயங்கல் - இங்ஙனம் நீ விரைந்து நடத்தலை ஒழிக, இங்குள்ள நின் கழல்கள் ஆர்க்குங்கள்ஏ - இவ்விடத்தே உள்ள உன் வீரக்கழல்கள் (விரைந்து நடந்துழி) ஆரவாரிக்குமன்றே! அங்ஙனம் ஆயின், மேகக்குழாம் கலங்கி - முகிற்கூட்டங்கள் அவ்வார்ப்பினால் கலக்கமுற்று, பொழில்கள் வெள்ளத்திடைப்புரள - சோலைகள் வெள்ளத்தால் முழுகிப் போம்படி, நூறுங்கள் - நொறுங்கி வீழும், (எ - று.) ஆர்க்கும் கள் ஏ: கள் - விகுதிமேல் விகுதி; ஏ : அசை. பிறாண்டும் இவ்வாறே கொள்க. நூறுங்கள் - பொழியும் எனினுமாம். நீ உனது கழல் ஒலிக்குமாறு நடத்தலைத் தவிர்க, தவிராயெனில் மேகங்கள் கலக்கமுற்றுப் பொழிந்து வெள்ளமுண்டாக்கும் என்றான் என்க. நம்பியின் கழல் முகில் கலங்க ஒலிக்கும் போலும். |