மைந்தர்களிருவரும் மங்கையர் மனதைக் கவர்தல்

74. செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று
எய்தினார் குமாராம் பிராய மெய்தலும்
2மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
3ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே.
     (இ - ள்.) செய்தமாண் நகரில் - தொழில் வல்லவராலே இயற்றப்பட்ட
மாட்சிமையுடைய அப் போதனமாநகரத்தில்; சிறந்து சென்றுசென்று - ஒவ்வொரு
கலையிலுஞ் சிறப்படைந்து சிறப்படைந்து வளர்ந்து; குமரர் ஆம் பிராயம்
எய்தினார் -காளைத்தன்மையுடைய பருவத்தை அடைந்தார்கள்;
எய்தலும் - அவ்வாறு காளைப்பருவத்தை யடைதலும்; மைதுழாம் நெடும்கணார் மனத்துள்
- மைதீட்டப்பெற்ற நீண்ட கண்களையுடைய மகளிரின் நெஞ்சத்துள்; காமனார் -
காமனுடைய; ஐதுஉலாம் - அழகுத்தன்மை பொருந்திய; கவர்கணை - உள்ளத்தைக் கவரும்
மலர்க்கணைகள்; அரும்பு வைத்த - மலர்தற்கு அரும்பத் தொடங்கின. (எ-று.)

மக்களிருவரும் எல்லாக் கலைகளிலும் சிறந்து கட்டழகு மிக்க இளங்காளைகளாக
இலங்கினார்கள். மைந்தர்களின் அழகு மங்கையர் உள்ளத்தைக் கவரத் தொடங்கியது.
செய்தமாண் நகரி என்பதற்கு விசய திவிட்டர்கள் தனியாகத் தங்கியிருத்தற்கு
அமைக்கப்பட்ட தனி அரண்மனை எனினுமாம். நெடுங்கண் - காதளவு நீண்டு செல்லும
நெடியகண். “காதள வோடிய கலகப் பாதகக்கண்“ என்றார் பிறரும்.

 ( 5 )