(இ - ள்.) ஆக்கலாகா அசும்பிருந்து - செயற்கையான் உண்டாக்க வியலாத இயற்கை ஊற்றுக்கண்கள் உளவாகி, கண்ணிற்கொரு நீக்க நீங்கா நிலம்போலத் தோன்றி - விலக்குதற்கியலாத வன்னிலம் போன்று காட்சிமாத்தி ரையே புலனாகி, புகில் - அதன்மேல் அறியாது செல்லுமிடத்தே, காக்கலாகாகளிறு ஆழஆழும் - தன்னைக் காத்துக்கொள்ள வியலாதபடி யானைகளும் முழுகிப் போமாறு ஆழ்ந்துவிடும் இயல்புடைய, புறம்தூக்கந் தூங்கும்தொளி - மேற்புறம் இறுகி உட்பகுதி தொளுதொளுவென்றிருக்கும் சேற்றுநிலத்தே, தொடர்ந்து பொன்றுங்கள் - உயிர்கள் அறியாமையால் சென்றழுந்தி மாயும், (எ - று.) தூக்கந்தூங்குதல் - தொளதொளெனல், பொன்றுங்கள் என்ற குறிப்பால் உயிர்கள் என்பது வருவித்துரைக்கப்பட்டது. மேற்புறம் இறுகி, உட்புறம் சேறாக இருக்கும் நிலத்தே உயிர்கள் அறியாதே சென்று மாயும் என்றான் என்க. |