(இ - ள்.) இது - இதுகாறும் கூறியது, இத்தாழ்வார் நிலத்தியற்கை - இம்மலைச்சரிவு நிலங்களின் தன்மைகளாம், மேலால் பல மதியம் பாரித்தென - இனி இம்மலைச்சிகரங்களிலோ எனில், பல திங்கள் மண்டிலங்கள் ஒரு சேர ஒரு காலத்திலே வெளிப்பட்டாற் போன்ற, மணிக்கற் பாறையின் மிசை - மாணிக்கக் கற்சிகரங்களின் மேல், நிதியம்பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் - பல்வேறு செல்வங்ளும் மிகுத்துக் கிடந்து ஒளிவீசி மிளிர்ந்து கிடத்தல் ஆகிய காட்கிகள், நிலைக்கதியின் வாழ்வாரையும் - அவாவறுத்து நிலைத்த கேவலஞானத்தின் நின்று வாழும் துறவியரையும், கண்கள் வாங்குங்கள் - கண்கவரும், (எ - று.) பொறியடக்கமுடைய துறவிகள் கண்களையும் இம் மலைநிலத்தே கிடந்திமைக்கும் மதியம்பாரித்தன்ன நிதியம் கவரும் என்றான் என்க. |