வேறு

748.

தாமரைத் 5தடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தரவில்சீர்த்
தாமரை 6த் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே.

     (இ - ள்.) தா இல் சீர் தாமரை தகு குணச்செல்வன் - குற்றமற்ற பெரும்புகழ்
படைத்த, தாமரை என்னும் எண்ணளவு உயர்ந்த தகுதியுடைய குணங்களையே செல்வமாக
வுடையோனே, தாம் மரை தடத்திடை - தாவுகின்ற மான்கள் மிக்க இந்நிலத்தின்கண்ணே,
சாரல்வாய் தாமரைமலர்ந்த - சார்பிடங்களிலே தாமரைகள் மலர்ந்துள்ளன, துளையொடு, -
மாதுளை மரங்களோடே, மறலி - குங்கும மரங்களும், சண்பகம் தாம் - சண்பக மரங்களும்,
அரைதடித்து - அடிப்பகுதி பருத்து, அலர் ததைந்து - மலர்கள் செறிந்து, தோன்றும் -
தோன்றா நிற்கும், (எ - று.)

     தாமரை - ஓரெண். செல்வன் - அண்மை விளி. மறலி - குங்குமமரம் துளை -
மாதுளை, (தலைக்குறை) இந் நிலத்தேயும் மருதநிலத்திற்குரிய தாமரைத் தடங்கள்
திகழ்கின்றன; சண்பகம் குங்குமம் முதலிய மரங்களும் பருத்து வளமுடையனவாய்த்
திகழ்கின்றன; என்றபடி.
 

( 176 )