வேறு
749.

நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே.
 

      (இ -ள்.) நாகம் - யானைகள், சந்தனத் தழைகொண்டு - சந்தன மரத்தின்
தழைகளை ஒடித்துக்கொண்டு, நளிர்வண்டு ஓச்சும் - தம்மேல் மொய்த்துச் செறியும்
அளிகளை ஓட்டும், நாகம் - சுரபுன்னைமரங்கள், சந்தனப் பொதும்பிடை - சந்தன
மரச்சோலையின் ஊடே, நளிர்ந்து - செறிந்து, தாது - மகரந்தப்பொடிகளை, உமிழ்வ -
உதிர்க்கும், நாகம் - பாம்புகள், செஞ்சுடர் - ஞாயிற்றை, நகும் - ஒவ்வாய் என
நகைக்கும்மணி - மணியை, உமிழ்ந்து இருள் கடிவ - கான்று இருளை அகற்றும், நாகம் மற்றிது - இம்மலை, நாகர்தம் உலகினை நகும் - தேவருலகத்தை என்னை ஒவ்வாய் எனச்
சிரிக்கும் என்பதாம், (எ - று.)

     முதல் அடியில் நாகம் - யானை; இரண்டாமடியில் நாகம் - சுரபுன்னை மரம்;
மூன்றாமடியில் நாகம் - பாம்பு; நாலாமடியில் நாகம் - மலை.
 

( 177 )