விசயனுடைய உடல், கண், குஞ்சி, காது

75. காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு 1பொலங்குழை புரளுங் காதினன்.

     (இ - ள்.) காமரு வலம்புரி கமழும் மேனியன் - அழகிய வலம்புரிச் சங்கைப்போன்ற
உடலையுடையவன்; தாமரை - தாமரை மலரின்; அக இதழ் தடுத்த - உள்ளிதழை
ஒப்பாகாமையினால் தடுத்துவிட்ட; கண்ணினன் - கண்களையுடையவன்; தூ மருள் இருள
துணர்ந்த அனைய குஞ்சியன் - கலப்பற்றதும் மருளுதற்கு ஏதுவாகியதும் ஆகிய
இருள்கொத்தாகத் திரண்டது போலும் தலைமயிரை உடையவன்; பூமரு பொலம்குழை -
பூத்தொழில் செய்யப்பெற்ற பொற் குண்டலங்கள்; புரளும் காதினன் - அசைகின்ற காதுகளையுடையவன். (எ - று.)

     விசயன் எவ்வாறிருப்பான் என்பதை இச் செய்யுளில் கூறுகிறார். வலம்புரிச் சங்கைப்
போன்ற வெள்ளிய உடலையுடையவன்; தாமரையின் அகவிதழைப் போன்ற கண்; இருள்
திரண்டாற்போன்ற குஞ்சியையுடையவன்; தூ - தூய. தூய இருள் என்றது, ஒளிக்
கலப்பற்றுச் செறிந்த இருள் என்றவாறு. நல்ல இருள் என்பது உலக வழக்கு. அழகிய
குண்டலங்கள் அசைகின்ற காதுகளையுடையவன். வலம்புரி - வலப்பக்கமாகச் சுழிந்துள்ள
சங்கு. அகவிதழ் அழகிலும் மென்மையிலும் சிறந்ததாகலின் உவமைக்கு அதனையெடுத்தார்.
அகவிதழ் தடுத்த - அகவிதழின் தன்மை முழுவதையும் புறத்தே செல்லவிடாது தடுத்துத்
தன்னிடத்தே அடக்கிக்கொண்ட. தூம் மருள் - என்பதனை தூமம் என்பதன் இடைக்
குறையாகக்கொண்டு புகையை ஒத்த இருள் என்று பொருள் கூறுவாரும் உளர். அங்ஙனம்
கூறுதல் உவமைக் குவமையாயிருக்கும்.

 ( 6 )