(இ - ள்.) சாந்தும் தண்டழையும் - சந்தனத்தையும் குளிர்ந்த தழையையும், இம்மலை ஆரம் - இம்மலைக்கண் உள்ள சந்தன மரங்கள், சுரமங்கையர்க்கு - தேவமகளிர்களுக்கு, ஏந்தி நின்றன - உபசரித்தற் பொருட்டுத் தாங்கிநின்றன, இம்மலையாரம் - இனி இம்மலைக்கண் உள்ள கடம்பமரங்களும், வாய்ந்த பூம்படையும் - பொருந்திய மலர்ப்படுக்கை களையும், மலர்க்கண்ணியும் - மலராகிய தலைமாலையையும், ஈந்த சாகையை - அச்சுர மகளிர்களுக்கு வழங்கின கிளைகளையுடையன, (எ - று.) கடப்பமலர் மாலைபோறலின் கண்ணி என்றார், கடப்பமலர் உதிர்ந்து கிடப்புழிப் படுக்கை விரித்தாற்போற் றோற்றலின், பூம்படை என்றார். 'படையமை சேக்கை' (கலி) |