(இ - ள்.) முன் - நம்முன்பு அதோ; பொன் விரிந்தனைய பூங்கோங்கும் வேங்கையும் - பொன்னை விரித்தாற்போன்று மலர்ந்து திகழும் அழகிய கோங்கமரமும் வேங்கைமரமும், விரிந்து உக்கன - தாம் மலர்ந்து சொரிந்தனவாகிய பூக்கள், மொய்த்த கற்றலம் - செறிந்த கல்லிடங்கள், மின்விரிந்து இடை இடை விளங்கி - ஒளிவீசுமாறு இடையிடையே திகழ்ந்து தோன்றி, இருள்முகில் - இருண்டமேகம், இந்திரன் வில்முறிந்து வீழ்ந்த போலும் - இந்திரவில்லோடு முறிந்து வீழ்ந்து கிடத்தலை ஒக்கும், (எ - று.) கோங்கம்பூவும் வேங்கைப்பூவும் உதிர்ந்து கிடக்கும் கற்பாறை, இடையிடையே மின்னல் விரிந்து தோன்றும் முகில்கள் வில்லோடே வீழ்ந்து கிடப்பனபோற் றோன்றும் என்க. |