வேறு
757.

அழலணி யசோகஞ் 1செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு 2பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே.

      (இ - ள்.) அழல் அணி அசோகம் - நெருப்புப் பிழம்பு நிமிர்ந்தாற் போன்ற
அழகிய அசோகமரம், செந்தாதணிந்து - தனது செவ்விய பூந்தாதாற் போர்க்கப்பட்டு, தேன்
அரற்ற நின்று - அளிகள் தன்னைச் சூழ்ந்துபாட நின்று, நிழலணி மணிக்கல் நீல
நிறத்தொடு - குளிர்ந்த அழகிய மரகதமணி யாகிய கல்லில் எழும் நீல வண்ணம்
கதுவப்பட்டு, நிமிர்ந்த - உயர்ந்து நின்ற, தோற்றம்-காட்சி, குழல் அணிகுஞ்சி
மைந்தர்-கடைகுழன்று அழகி தாகிய தலைமயிரையுடைய ஆடவர்கள், குங்குமக் குழம்பு பூசி
- குங்குமக் குழம்பைத் திமிர்ந்துகொண்டு, எழிலணி திகழ - எழுச்சிமிக்க அழகு
விளங்குமாறு, நின்றால் எனையநீர் - நின்றால் எத்தன்மையாகத் தோன்றுமோ, அனைய
தொன்றே - அத்தகைய தன்மையுடைய தொன்றாம், (எ - று.)

     நீலமணியின் ஒளி தன்பாற் பரவத் தீப்பிழம்பு போன்று மலர்ந்து திகழும் அசோகு,
ஆடவர்கள் குங்குமம் பூசி அணிதிகழ நின்றாற்போலும் என்க.

( 185 )