(இ - ள்.) தேன் இணைந்து முழங்க - அளிகள் தம் துணைகளுடனே சேர்ந்துபாட, விண்ட ஏழிலம்பாலை - மலர்ந்த ஏழிலைம்பாலை மரத்தினது, வெண்பூ மணந்து - வெளிய பூ மணங்கமழப் பெற்று, தாது அணிந்து - பூந்துகள் போர்க்கப்பட்டு, தோன்றும் - காணப்படுகிற, மரகத மணிக்கற் பாறை - மரகதம் என்னும் கல்லாலியன்ற பாறை, கணங்கெழு களி வண்டால - கூட்டமாகக் குழீஇய களிப்புடைய வண்டுகள் பாட, பாசடை கலந்த பொய்கை - பசிய இலைகள் அடர்ந்த குளம், ஒளி தணந்து விடாத - ஒளியகலாத, வெண்டாமரை ததைந்தது அனையது ஒன்றே - வெள்ளிய தாமரைமலர்கள் செறியப்பெற்ற காட்சியை ஒப்பதொன்றாம், (எ - று.) ஏழிலைம்பாலை மலர்ந்து தாதணிந்து நிற்றலையுடைய மணிக்கற்பாறை வெண்டாமரைத் தடம்போல் விளங்கும் என்க. |