(இ - ள்.) வாடல் இல் கண்ணியன் - வாடுதல் இல்லாத மாலையை அணிந்தவன்; மலர்ந்த மார்பினன் - விரிந்த மார்பையுடையவன்; தாள் தவழ் தடக்கையன் - முழங்கால் அளவும் நீண்டு விளங்கும் பெரிய கையை உடையவன்; தயங்கு சோதியன் - விளங்குகின்ற உடல் ஒளியை உடையவன்; கோடுஉயர் குன்று என - உயர்ந்த உச்சியினையுடைய குன்று போல; குலவு தோளினன் - விளங்குகின்ற தோள்களையுடையவன்; பீடு உடை நடையினன் - சிங்கவேற்றின் பெருமித நடையைப்போலும் நடையை உடையவன்; பெரிய நம்பி - பெரியவனான விசயன். (எ - று.)
இச் செய்யுளும் விசயனைப்பற்றியே கூறுகின்றது. வாடலில் கண்ணியன் என்றமையின் விசயனுடைய தெய்வத்தன்மை விளங்குகின்றது. கைகள் நீண்டிருத்தல் ஆடவர்கட்கு நல்லியல்பாகும். தோளுக்குக் குன்று உவமை. நம்பி - ஆடவரிற் சிறந்தவன்; குவவுத் தோளினன் என்னும் பாடத்திற்குப் பருத்த தோள்களையுடையவன் என்று பொருள் கொள்க.