762.

ஆவிவீற் றிருந்தகாத லவரொடு கவரி வேய்ந்து
நாவிவீற் றிருந்து நாறு நளிர்வரைச் சிலம்பின் 2மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
3பாவின்வீற் றிருந்த பண்ணி 4னாமுதினாற் படைக்கப்பட்டார்.

     (இ - ள்.) ஆவிவீற்றிருந்த காதல் அவரொடு - தம் உயிரின்கண்
வீற்றிருந்தாற்போன்ற ஆழ்ந்த காதலரொடு, கவரிவேய்ந்து - கவரிமாவின்
மயிர்க்கற்றையைச்சூடி, நாவிவீற்றிருந்து நாறும் நளிர்வரை - கத்தூரி இடையறவின்றி
மணக்கும், செறிந்த மூங்கில்களையுடைய, சிலம்பின் மேயார் - மலையினிடத்தே எய்திய மகளிர்கள், காவிவீற்றிருந்த கண்ணார் - நீலோற்பலம் போன்ற கண்ணினராகிய, கந்தர்வ மகளிர் கண்டாய் - கந்தருவ மகளிர்கள் ஆவார் என அறிவாயாக,(அவர்கள் எத்தகைய ரெனில்) பாவின் வீற்றிருந்த பண்ணின் அமுதினாற் படைக்கப்பட்டார் - பாடலின்கண் அமைந்திருந்த பண்ணினது இசையமுதினால் உடல் படைக்கப்பட்டாற் போன்ற இனிமையுடையார், (எ - று.)

     உயிர்போலும் காதலுடையோருடன் அம்மலையிடத்தே உள்ளோர் பண்ணாலே
உடல்படைத்தாற் போன்ற இனிமை மிக்க கந்தருவ மகளிர் என்க.

( 190 )