(இ - ள்.) தும்பிவாய் துளைக்கப்பட்ட கீசகம் - வண்டுதன் வாயால் தொளைக்கப்பட்ட மூங்கில், வாயுத்தன்னால் - காற்று வீசுதலாலே, வம்பு அவாம் - புதிய இசையழகை அவாவு தலையுடைய, குழலின் ஏங்க - குழல் என்னும் இசைக் கருவி போன்று ஒலிக்கவும், மணியறை - மணிகள் பரவிய நிலம், அரங்கம்ஆக - கூத்தாட்டரங்கு ஆகவும், உம்பர்வான் மேகசால ஒலி - உயரிய விசும்பின்கண் உள்ள முகில்களின் முழக்கம், முழாக்கருவியாக - மத்தள ஒலியாக அமையவும், தேன்பாட - அளிகள் இசைபாட, மஞ்ஞை நாடகம் நவில்வ - மயில்கள் விறலியர்போல் கூத்தாடுதலை, நம்ப காணாய் - பெருமைமிக்க திவிட்டனே நீ காண்க! (எ - று.) வண்டுகளாற் றுளைக்கப்பட்ட மூங்கில்களிலே காற்று நுழைதலாலே, அது குழல்போலிசை யெழுப்ப, மணியறையை அரங்காகக் கொண்டு முகில் ஒலி முழவாக வண்டுபாட மயிலாடும் நாடகம் என்க. |