(இ - ள்.) குலிகச் சேறு அலம்பி - கத்தூரிக் குழம்பை அளாவி, குன்றம் கொப்புளித்திட்டது ஒப்ப - மலை கொப்புளித்தாற் போன்று, அரங்கம் - நின்னாற் கொல்லப்பட்ட போர்க்ளத்திற்கிடந்த, வலிகற்ற மதர்வை பைங்கண் வாள் எயிற்று சீயம் - ஆற்றல்மிக்க மதக்களிப்பையும் பசிய கண்களையும் ஒளிமிக்க பற்களையுமுடைய சிங்கத்தினது, கலிகற்ற களிறு உண்பேழ்வாய்க் கலிங்கினான் இழிந்து போந்து - பிளிறுதலையுடைய யானைகளை உண்ணும் பெரிய வாய் என்னும் மதகின் வழியாய்ப் பாய்ந்து வந்த, ஒலிகற்ற உதிர நீத்தம் - ஒலிமிக்க குருதியாலாகிய வெள்ளம், இன்னும் ஒழுகுவது - இன்னும் ஓடுவதனை, நோக்காய் - காண்க! (எ - று.) உன்னாற் கொல்லப்பட்ட அரிமாவின் வாயாகிய மதகுவழிப் பெருகி முழக்கத்தோடே பாயும் குருதிவெள்ளம் யோசனை தூரத்தின் இப்பாலும் ஓடுதல் காண் என்றான் என்க. இது முதல் 3செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல் |