771.

ஆங்குநீ 1முனிந்த போழ்தி னரியது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னொங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்.
 

      (இ - ள்.) வாங்கு நீர் வண்ண கேளாய்! - வளைந்த கடல்போன்ற நீல வண்ணனே!
கேட்பாயாக, ஆங்கு நீ முனிந்த போழ்தின் - அவ்விடத்தே நீ சினந்து ஆரவாரம்
செய்தபொழுது, அரியது அகல நோக்கி - அச்சிங்கம் அஞ்சி ஓடியதைக் கண்டபொழுது,
மாயமா மதித்து நின்றேன் - மாயம் என எண்ணி நின்றேன், ஒலிபுனல் உதிர யாறு -
முழக்கத்தையுடைய நீர்போன்ற குருதியாறு, வீங்கி வந்து இழிந்தபோழ்து - பெருகி வந்து
பாய்தலைக் கண்டபின்னர்த்தாள், மெய்யென வியப்புச் சென்றேன் - உண்மையே
என்றுணர்ந்து வியப்புற்றேன், (எ - று.)

     நம்பீ! நீ ஆரவாரித்தபோது ஓடிய அரிமாவைக் கண்டு இஃதொரு மாயம் போலும்
என்று எண்ணியிருந்தேன். ஓசையுடனே குருதியாறு பாயக் கண்ட பின்னரே உண்மை
என்றுணர்ந்து வியந்தேன் என்றான் என்க.

( 199 )