(இ - ள்.) ஊன் பயில் நரம்பின் யாத்த உருவமும் - இறைச்சி மெத்தி நரம்பாற் கட்டப்பட்ட பருவுடலும், புகழும் - புகழ் என்னும் நுண்ணுடலும், என்று ஆங்கு - என்று கூறப்பட்ட, இரண்டு யாக்கை ஒருவனது - இருவேறு உடல்கள் ஒரு மனிதனுக்கு உள்ளன, அவற்றின் - அவ்விருவேறுடல்களுள் வைத்து ஒன்றாகிய, ஊழ்காத்து வந்து மருவிய உருவம் - ஊழால் காவல் செய்துதரத் தோன்றிய ஊன்பயில் பருஉடல், இங்கே மறைந்துபோம் - அது தோன்றிய ஊன்பயில் பருஉடல், இங்கே மறைந்துபோம் - அது தோன்றிய இவ்வுலகத்திலேயே ஊழ்க்காவலற்ற கணமே அழிந்தொழிவதாம், மற்றயாக்கை - இனி மற்றொன்றாகிய புகழுடம்போ எனில், திருவமர்ந்து உலகம் ஏத்த - நன்மையின்கண் நிலைபெற்று உயர்ந்தோர் புகழும்படி, சிறந்து பின்னிற்கும் அன்றே - சிறப்புற்றுப் பின்னர் எக்காலத்தும் அழிவின்றி நிலைத்து நிற்கும் இயல்பிற்று. (எ - று.) ஒரு மனிதனுக்கு ஊனுடல் என்றும் புகழுடல் என்றும் இரு வேறுடல்கள் உள்ளன, அவற்றுள் முன்னையது ஊழ்தரவந்தது; அஃது அழிந்தொழியும்; மற்றொன்றோ தானே தேடிக்கொள்வதாம்; அஃது அழியாமல் நின்று நிலவும் என்றான் என்க. ஒன்று ஊழ்காத்து வந்த தென்றலின் மற்றொன்று தான் தேடவந்த தென்றாம். |