வேறு விசயதிவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து
பாலைநிலம் எய்துதல்

777.

என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த 1குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்.
 

      (இ - ள்.) என்று தம் கதையோடு- என்றிவ்வாறு தம் சொல்லாடு தலோடு, இரு
நீண்முகில்குன்று சூழ்ந்த, பெரிய நீளிதாய முகில் தவழும் குன்றுகளாற் சூழப்பட்ட - குழு
மலர்க்கானகம் சென்று - நிறைந்த மலர்களையுடைய காட்டைக்கடந்து போய், ஓர்
வெங்கடம் சேர்ந்தனர் - ஒரு வெப்பமிக்க பாலை நிலத்தை எய்தினர், உச்சிமேல் நின்று
வெய்யவனும் - அப்பொழுது வானத்துச்சிக்கண் நின்று கதிரவனும், நிலங்காய்த்தினான் -
மேலும் அப்பாலை நிலத்தை வெதும்பச் செய்தான்.

     என்றிவ்வாறு உரை நிகழ்த்தியவாறே விசயதிவிட்டர், ஒரு கொடிய பாலையை
எய்தினர்; அப்போது ஞாயிறும் உச்சியினின்று உலகத்தை வெதுப்பினன் என்க.

( 205 )