வேறு

782.

அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று விழ்ந்தது போன்றுள 2வாங்கெலாம்.

     (இ - ள்.) நீர்அற்ற அழுவத்திடை - நீர் வறந்து ஒழிந்த அப்பாலையில், நெல்லியின்
வற்றல் அஞ்சினை - நெல்லிமரத்தினது உலர்ந்து வற்றிப்போன கிளைகளின்,
ஊடுவலித்தரோ - ஊடே சென்று, மற்ற வெவ் வெயிலும் - நிலத்தே படிந்த அவ்வெவ்விய
வெயில், நிழல்வாய் அழல் உற்று வீழ்ந்தது போன்றுள - நெருப்பும் அப்பாலையின்
வெப்பத்தை அஞ்சி அந்நெல்லியின் சினை நிழலை விரும்பி அங்குச் சென்று வீழ்ந்து கிடப்
பதைப்போன்று தோன்றிற்று, ஆங்கெலாம் - அவ்விடத்தில் எல்லாம்,(எ - று.)
நெல்லிமரத்தின் உலர்ந்த கிளைகளினூடே பாய்ந்து நிலத்திற் படிந்த வெயில், நிழலைவிரும்பி நெருப்பு அம் மரத்தடியின்கீழ் வீழ்ந்த கிடப்பதுபோலத் தோன்றிற்று என்பதாம்.

( 210 )